வங்கி வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகைகளை வைத்து மிகப் பெரிய மோசடியை ஐசிஐசிஐ வங்கி ஊழியர்கள் செய்திருந்த நிலையில் இது குறித்த விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானமாக வைத்த சுமார் 2 கோடி மதிப்புள்ள 533 சவரன் தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகைகள் வைத்து மோசடி செய்த வங்கி மேலாளர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மண்டல மேலாளர் தலைமையில் வங்கியில் நடைபெற்ற ஆய்வின் போது இந்த உண்மை தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதன் கைதான நான்கு பேரில் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்தவர் என்பதும், மற்ற மூன்று பேரும் வங்கி ஊழியர்கள் என்பதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் நகைகளை காக்க வேண்டிய வங்கி ஊழியர்கள் தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகைகள் வைத்து சுமார் 2 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த வங்கியில் நகைகளை அடமானம் வைத்த வங்கி வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், அடமானம் வைத்த வாடிக்கையாளர்களுக்கு உரிய வகையில் நகைகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.