சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் தன்னை உலகநாயகன் என்றோ மற்ற பட்டங்களை கொண்டு அழைக்க வேண்டாம் என்று கூறிய நிலையில் இது குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு மக்கள் நீதி மய்யம் பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;
பா.ஜ.,வில் கேட்பாரற்று இருக்கும் தமிழிசை கமல் தனக்கு அளிக்கப்பட்ட உலகநாயகன் என்ற பட்டத்தை தவிர்க்கும் படி வெளியிட்ட அறிக்கையை அரைவேக்காட்டுத்தனமான விமர்சித்துள்ளார்.
தேர்தலில் நின்று எம்.பி., ஆகி மத்திய அமைச்சராகி விடலாம் என்ற கனவில், இருந்த கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை; தன் வாழ்க்கையையே சரியாக கணிக்க முடியாதவர்; கமல் செயல்பாட்டை கணிக்க முயன்றுள்ளார். கமல், உலக நாயகன் பட்டத்தை துறந்தது தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கலைத்துறையில் முழுமை பெற்ற ஞானத்தின் வெளிப்பாடு.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிரட்டும் போக்குள்ள அரசுமல்ல என்பதை தமிழிசை புரிந்து கொள்ள வேண்டும். அது சாதித்த மனிதனின் பக்குவத்தின் வெளிப்பாடு. இதை புரிந்து கொள்ளும் பக்குவம் தமிழிசைக்கு இல்லை என்பது வருத்தத்திற்குரியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.