தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ரஜினி ஆதாயம் கருதி அரசியலுக்கு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் அமைச்சர் கருப்பண்.
தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கமல்ஹாசனும் மக்கள் நீதி மய்யம் தொடங்கி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து எதிர்பார்ப்புகள் மட்டுமே நிலவி வருகின்றன.
தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கட்சி தொடங்காமல், உறுப்பினர் சேர்க்கை நடத்தாமல் இருப்பது ரஜினி மக்கள் மன்றத்தினரிடயேயும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலும் சிலர் ரஜினி விரைவில் கட்சி தொடங்குவார் என கூறி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய அமைச்சர் கருப்பண் ‘நடிகர்கள் அரசியலில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. இனி தமிழகத்தில் விவசாயிகள் மட்டும்தான் முதலமைச்சராக இருக்க முடியும். ரஜினி தன் படங்கள் வெளியாகி வெற்றி பெறுவதற்காக மட்டுமே அரசியலை பயன்படுத்தி கொள்கிறார்” என கூறியுள்ளார்.