Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும்- அண்ணாமலை

அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும்- அண்ணாமலை
, திங்கள், 4 செப்டம்பர் 2023 (16:25 IST)
சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அவருக்கு பாஜக உட்பட ஒரு சில கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ‘’அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சேகர் பாபு  இவர்கள் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததும் அதிர்ச்சியளிக்கிறது’’ என  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’சென்னையில், சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் பிழைப்புவாதிகள் நடத்திய கூட்டமொன்றில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் திரு. வீரமணி அவர்கள், இந்து மதமும் சனாதன தர்மமும் வேறுவேறல்ல, இரண்டும் ஒன்றுதான். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று பேசினார். அவருக்குப் பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இவர்களது நோக்கம் என்ன என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை.

ஆனால், இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் பேசிய அதே கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு சேகர் பாபு அவர்கள் கலந்து கொண்டதும், இவர்கள் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததும் அதிர்ச்சியளிக்கிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மீக உரிமையை அவர் இழந்து விட்டார்.

இன்னும் ஒரு வார காலத்தில், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், தனது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து திரு சேகர் பாபு அவர்கள் பதவி விலக வேண்டும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய அறநிலையத் துறையில் என்ன வேலை?

வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், திரு  சேகர்பாபு அவர்கள் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவில்லை என்றால், செப்டம்பர் 11 ஆம் தேதி, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் '' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''ஊரே வியக்கும் சீர்வரிசை''- நண்பரின் இல்ல காதணி விழாவில் சக நண்பர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்