நடிகர் விவேக் இறந்ததற்கு கொரோனா தடுப்பூசி காரணம் என சிலர் கூறி வருவது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விவேக் நேற்று உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் முன்னதாக அவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதே அதற்கு காரணம் என மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் குற்றம் சாட்டி வருவதாலும், இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களாலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்கப்பட்டபோது “இதுபற்றி ஏற்கனவே சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார், மருத்துவமனை நிர்வாகமும் தேவையான விளக்கத்தை அளித்துள்ளது. ஒரு நாளைக்கு 2 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக் கொள்கிறார்கள். தடுப்பூசியால் எந்த பக்கவிளைவும் இல்லை என்பதை பலமுறை விளக்கி கூறியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
மேலும் ”தமிழகத்தில் சுகாதார கட்டமைப்புகள் வலுவாக உள்ளதால் கொரோனாவை எதிர் கொள்ள முடியும். அதேசமயம் பொதுமக்கள் அலட்சியமாக இருந்தால் எதிர்வரும் 3 வாரங்கள் நமக்கு மிகவும் சவாலானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.