அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என மு.க.அழகிரி தகவல்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவிலிருந்து விலகி பல காலமாக அரசியல் தொடர்பின்றி இருந்த மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அவரது ஆதரவாளர்களோடு அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்ட நிலையில் பாஜகவோடு அவர் இணைய போவதாகவும் பேசிக்கொள்ளப்பட்டது.
ஆனால் இந்த தகவல்களை மறுத்துள்ள மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்கும் எண்ணம் தமக்கு இல்லை என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் குறித்து பேசியுள்ள பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், மு.க.அழகிரி பாஜகவில் இணைந்தால் கண்டிப்பாக வரவேற்போம் என கூறியுள்ளார்.
எல்.முருகன் இந்த பதில் மு.க.அழகிரிக்கு விடுக்கப்படும் ரகசிய அழைப்பு என அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என மு.க.அழகிரி தகவல் வெளியிட்டுள்ளார்.
மேலும் கனவரி அல்லது அதற்கு பிறகு ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி எனது அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். முக அழகிரியின் இந்த பதில் எல்.முருகனின் அழைப்பை ஏற்று பாஜகவில் இணைவாரா என்ற சந்தேகத்தை அரசியல் வட்டாரத்தில் எழுப்பியுள்ளது.