கொளத்தூர் தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசிய நிலையில், வழக்கு குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் பிரபலங்கள் இடையேயான வாக்குவாதங்கள் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொளத்தூர் தொகுதி தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி குறித்த வழக்கை சுட்டிக்காட்டி “தேர்தல் வழக்கு வேறு விதமாக அமைந்தால் மு.க.ஸ்டாலினால் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது” என பேசியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், தான் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை உள்ளிட்ட ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும், தனது வெற்றியும், பதவியும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் பேசியுள்ளார். மேலும் ”மே மாதத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், அவரது சகாக்களும் எங்கிருக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்து விட்டனர். பழனிசாமி அவர்களே உங்களுக்கும், உங்கள் ஆட்சிக்கும் ”கவுண்ட் டவுன்” மணியை அடித்துவிட்டார்கள். உங்களுக்கு மணியோசை கேட்கவில்லையா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.