தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான வைப்புநிதி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா பரவல் நீடித்து வரும் நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பல குழந்தைகளும் தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கியில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி வைக்கப்படும் என்றும், அவர்களுக்கான கல்வி செலவை அரசு ஏற்கும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, கொரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி வைக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் தாய், தந்தை இருவரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் உடனடி நிவாரணம் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.