இன்று தொடங்கியுள்ள சட்டசபை கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த திமுக தலைவர் ஸ்டாலின் அதற்கான காரணம் குறித்து அறிக்கை எழுதியுள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுனர் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டத்தை திமுகவினர் ஆட்சேபணை தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். நாட்டில், மாநிலத்தில் நடைபெறும் பிரச்சினைகள் குறித்து பேச அனுமதிக்காதது வெளிநடப்புக்கு காரணம் என கூறப்பட்ட நிலையில் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “மக்களை பிளவுபடுத்தும் குடியுரிமை சட்டம் பற்றியோ, தமிழகத்தின் தொழில்வளர்ச்சி குன்றியுள்ளது பற்றியோ, பொருளாதார ரீதியான வீழ்ச்சியை பற்றியோ, வேலைவாய்ப்பின்மை பற்றியோ எதுவுமே பேசாமல் சம்பிரதாயத்துக்காக பேசுவது போல ஆளுனரின் உரை உள்ளது.
ஊழல் என்பதே நோக்கம், பாஜகவின் பாதம் தாங்குவது பரமசுகம் என நடக்கும் அதிமுக ஆட்சியில் ஆளுனர் உரையால் தமிழகத்தில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என்பதால் வெளிநடப்பு செய்துள்ளோம்” என விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் ‘திமுக விவாதம் பல இடங்களிலும் இப்படி வெளிநடப்பு செய்தே வந்திருப்பதாகவும், இது புதிதல்ல என்றும் பேசிக் கொள்வதாக கூறப்படுகிறது.