ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் நளினி ஒரு மாத கால பரோலில் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன் நளினி உள்ளிட்டோரின் விடுதலை குறித்த சட்ட தீர்மானம் ஆளுநர் வசம் உள்ளது. அதுகுறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நளினிக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் அவருக்கு பரோல் வழங்கவேண்டும் என ஒரு மாதத்துக்கு முன்னர் அவரின் தாயார் விண்ணப்பித்திருந்தார்.
இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கவேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த விளக்கத்தை ஏற்ற தமிழக அரசு வழக்கை முடித்து வைத்தது.
இந்நிலையில் வேலூர் பெண்கள் சிறையில் இருந்த நளினி இன்று முதல் பரோல் வழங்கப்பட்டு சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். அங்கிருந்து அவர் காட்பாடி அருகே உள்ள பிரம்மபுரத்தில் இருக்கும் அவரின் உறவினர் வீட்டில் தங்க உள்ளார்.