எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
காவிரி டெல்டா பகுதியில் ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டத்தை, மக்களிடம் கருத்து கேட்காமல் ஓ.என்.ஜி.சி. அமைக்க முயற்சிப்பதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் குற்றம் சாட்டியிருந்த நிலையில், கதிராமங்கலத்தில் அதுதொடர்பாக ஆய்வுக்கு வந்த ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகளுக்கு ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவித்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். பேராசிரியர் ஜெயராமனுடன் வந்த அவரது குடும்பத்தினரையும் போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறையின் இந்த அடக்குமுறை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர் த.ஜெயராமன் மற்றும் அவரது குடும்பத்தினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் அழிவுத் திட்டங்களை செயல்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடந்தி வருகின்றனர். கடந்த 2017-ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற மக்கள் திரள் போராட்டத்தால் ஓ.என்.ஜி.சி. பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. ஆனால், மக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இன்றைய தினம் காவல்துறையினரின் துணையோடு கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. மீண்டும் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆகவே, பொதுமக்களின் கருத்து கேட்காமல், காவல்துறையை குவித்து ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ஓ.என்.ஜி.சி. மேற்கொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கும் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.