பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், பதற்றம் காரணமாக சென்னை பெரம்பூர், செம்பியம் பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை தனது வீட்டுக்கு முன்பு அவர் இரு சக்கரவாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னை ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு உடல்கூராய்வு செய்யப்பட்டு அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த கொலைவழக்கு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில் செய்தியாளரும் நடிகையுமான அனிதா சம்பத் இந்த கொலை வழக்குப் பற்றி தன்னுடைய கேள்விகளையும் சந்தேகங்களையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள்தான் உண்மையான குற்றவாளிகளா என்ற சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும் “வடசென்னை பெரம்பூர் பகுதி எப்போதும் ஜாலியான பகுதி. ஆனால் இன்று அமைதியாகவும் பயமாகவும் இருக்கிறது. ஒரு தேசிய கட்சியின் தலைவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மனிதர்களின் நிலை என்ன? வயதானவர்கள் மற்றும் குழந்தையோடு இருக்கும் பெண்களின் நிலை என்ன? என்று நினைக்கவே பயமாக இருக்கிறது” என ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.