அரபிக் கடலில் ஒரே சமயத்தில் கியார் மற்றும் மகா ஆகிய இரு புயல்கள் நிலைகொண்டுள்ள நிலையில் மகா புயல் தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இரண்டு புயல்கள் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒருசில மாவட்டங்களுக்கு கடந்த செவ்வாய் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர், தேவாலா தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மற்ற மாவட்டங்களின் நிலை குறித்து நாளை காலை தெரிய வரும்
இந்த நிலையில் மகா, கியார் புயல் எச்சரிக்கை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் குமரி மாவட்டத்தில் இயல்பைவிட 77% கூடுதலாக மழை பதிவாகியுள்ளதாகவும் கன்னியாகுமரி ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக கடலுக்குள் செல்லாமல் இருக்கும் மீனவர்கள் தற்போது இந்த அறிவிப்பால் அதிருப்தி அடைந்துள்ளனர்.