பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலை ஏற்று தான் சிறு வயதில் படித்த விழுப்புரம் பள்ளிக்கூடத்தை காண நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை புரிவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசின் 2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நேற்று நடந்து முடிந்தது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார். தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் கூட்டத்தொடரில் நடந்து வருகிறது.
இந்நிலையில் பட்ஜெட் மீதான விளக்கங்களை மக்களுக்கு எடுத்து சொல்லும் பொருட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 15 மாநிலங்களில் கருத்தரங்குகள், விளக்க கூட்டங்களில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் தமிழகம் வரும் நிர்மலா சீதாராமன் எதிர்வரும் 13ம் தேதியன்று விழுப்புரம் பாஜக மகளிரணி நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து தான் விழுப்புரத்தில் ஐந்தாவது வரை படித்த சேக்ரட் ஹார்ட் கான்வெண்ட் பள்ளிக்கும் நிர்மலா சீதாராமன் செல்ல உள்ளார். பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை ஏற்று நிர்மலா சீதாராமன் தனது பள்ளியை சுற்றிப்பார்க்க செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.