சிவகங்கை முத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் வியாழக்கிழமை பிற்பகலில் சிவகங்கை 48 காலணி செல்லும் வழியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் -ல் வீட்டுத் தேவைக்காக ரூ.10,000 பணம் எடுத்துள்ளார்.
கைக்கு கிடைத்த பணத்தை எண்ணிப் பார்த்த போது அனைத்து பணத்தாள்களுமே (ரூ.500) கறை படிந்து அழுக்கான அவற்ற மாற்ற முடியாத நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அவசரத் தேவைக்கு எடுத்த பணம் செலவழிக்க முடியாத நிலை ஏற்பட்டது குறித்து வேதனை அடைந்தார்.
இதுகுறித்து வாரச் சந்தை சாலையில் உள்ள முதன்மை வங்கிக்கு புகார் தெரிவிக்கச் சென்றார்.
ஆனால் ரமலான் விடுமுறை என்பதால் அங்கிருந்த காவலர் மறுநாள் வந்தால் மாற்றிக் கொள்ளலாம் எனக் கூறினார்.
ஆனால் வீட்டு வேலை பார்ப்பவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்பதால் அங்கேயே நின்று புலம்பிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது வங்கியில் இருந்த அதிகாரி ஒருவர் வெளியில் வந்து அவரிடமிருந்த பழைய பணத்தாள்களை மாற்றிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.