மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஸ்டாலின் மாலை அணிவித்ததை குறிப்பிட்டு கேள்வியெழுப்பி உள்ளார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்றார். பதவியேற்பு விழாவிற்கு கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின் உத்தவ் தாக்கரேவுக்கு மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ”சிவசேனா போன்ற மதம் சார்ந்த ஒரு கட்சியின் தலைவர் முதல்வரானதற்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். இவர்தான் மதசார்பற்ற தலைவரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ்தான் சிவசேனாவுடனும் கூட்டணியில் உள்ளது என்பதால் ஸ்டாலின் மாலை அணிவித்ததாக திமுக தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கனவே ஸ்டாலின் மிசா கைது விவகாரத்தில் ஓ.எஸ்.மணியன் பேசியதால் ஏற்பட்ட சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் இந்த பேச்சு இரு கட்சிகளிடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.