அதிமுக பொதுச்செயலாளராக ஜெ.வின் தோழி சசிகலா நியமிக்கப்பட்டதற்கும், முதல் அமைச்சராக அவர் முன்னிறுத்தப்படுவதற்கும் 97 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பது சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய ஆன்லைன் சர்வேயில் தெரிய வந்துள்ளது.
ஜெ.வின் மறைவிற்கு பின் அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவி அவரின் தோழி சசிகலாவிற்கு அளிக்கப்பட்டது. மேலும், அவரே தமிழகத்தின் முதல்வராக வர வேண்டும் என அதிமுக முக்கிய அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சசிகலாவும், அவரின் குடும்பத்தினரும் அதை நோக்கி மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு ஆதரவாக நின்றாலும், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஒன்றரை கோடி பேர்களில் பெரும்பாலானோர் அவரின் தலைமையில் கட்சி செயல்படுவதை விரும்பவில்லை என ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், பொதுமக்களில் பெரும்பாலானோருக்கும் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பது சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மக்கள் பிரச்சனைக்காக போராடி வரும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சமீபத்தில் ஆன்லைனில் ஒரு சர்வே நடத்தியது. பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கும், அவரே முதல்வராக வேண்டும் என்ற கருத்திற்கும் இருக்கும் ஆதரவுகள் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதில் பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கு பெறுபவர்கள் தங்களின் வயது, மாவட்டம் ஆகிய விபரங்களை அளித்துவிட்டு இந்த சர்வேயில் கலந்து கொண்டனர்.
இதில் சசிகலா பொதுச்செயலாளரானது பற்றிய முதல் கேள்விக்கு, தமிழகத்தின் 32 மாவட்டங்களிலிருந்து மொத்தம் 3,090 பேர் கலந்து கொண்டனர். அதில் 2,916 பேர் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் 174 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே, 94 சதவிகிதம் பேர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது தெரிய வந்தது.
அடுத்த கேள்வி சசிகலா தமிழகத்தின் முதல் அமைச்சரக நியமிக்கப்படுவது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? என்பதாக இருந்தது. அதற்கு 2984 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். 106 பேர் ஆதரவாக வாக்களித்தனர். மொத்தத்தில் 97 சதவீதம் பேர், அவர் முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.