விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக சமூக ஊடகங்களில் திட்டமிட்ட அவதூறுகள் பரப்பப்பட்டு வருவதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பாலுவுக்கு சாதியவாத சிந்தனை இருக்கிறது, சமூகநீதி சமத்துவம் போன்ற கோட்பாடுகளுக்கு அவரிடம் இடமே இல்லை, அப்பாவி வன்னிய இளைஞர்களை தூண்டி விடுகிறார், பாழ்படுத்துகிறார் என்று நான் குறிப்பிட்டேனே தவிர ஒட்டுமொத்த வன்னியர் சமூகத்தையும் நான் இழிவுப்படுத்தவில்லை.
பாமக திட்டமிட்டு வன்னியர் சமூக இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறது. இதனால் பாதிக்கப்படுவது யார்? வழக்குகளை சுமப்பது யார்? ஆகவே, வன்னிய சமூகத்தின் நலன் கருதி தான் நான் ஆத்திரப்பட்டேனே தவிர வன்னிய சமூகத்திற்கு எதிராக நான் பேசவில்லை.
வன்னிய சமூகத்தினருக்கு நான் விடுக்கிற வேண்டுகோள் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், சாதி உணர்வுகளை தூண்ட கூடியவர்களுக்கு பலியாகிவிடக் கூடாது, நான் வன்னிய சமூகத்திற்கோ பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கோ எதிரானவன் இல்லை, உழைக்கிற மக்களுக்கு உயிரையும் கொடுக்கக் கூடியவனாக களத்தில் நிற்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.