செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மெத்தனால் சப்ளை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தியதில் 8 பேர் பலியான நிலையில் மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதுடன், தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய வியாபாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் செங்கல்பட்டில் இறந்தவர்கள் குடித்தது கள்ள சாராயம் அல்ல என்றும் அதில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற கெமிக்கல் கலப்பட்டிருந்ததாகவும் காவல்துறை விளக்கம் அளித்திருந்தது.
இதுதொடர்பாக தொடர் விசாரணையில் ஈடுபட்ட காவலர்கள் மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் இளைய நம்பி என்பவரை கைது செய்துள்ளனர். இவரிடம் இருந்து மெத்தனால் வாங்கி விஷ சாராயம் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தனியார் நிறுவனத்தில் கையிருப்பில் இருந்த மெத்தனாலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.