தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டைப் பாக்கெட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு பதில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பிய டிடிவி தினகரன் ஆதரவாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19ஆம் தேதி வந்தார். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமருடன் விருந்தினர் மாளிகையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரநிதிகளை சந்தித்து பேசினர்.
இந்த புகைப்படம் பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியானது. எடப்பாடி பழனிசாமி தனது சட்டைப் பாக்கெட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருப்பார். அதற்கு பதில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்து மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கனகராஜ் என்பவர் கன்னியாகுமரி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஆதரவாளர் அலெக்ஸ்பாண்டி என்பவர்தான் படத்தை மார்ஃபிங் செய்து பரப்பியது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.