தலைமைச்செயலகத்தில் போலீஸ் குவிப்பு: போராட்டம் வெடிக்கும் பதற்றம்!
தலைமைச்செயலகத்தில் போலீஸ் குவிப்பு: போராட்டம் வெடிக்கும் பதற்றம்!
ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலம் கிராம மக்கள் சென்னையில் போராட்டம் நடத்தப் போவதாக நேற்று தகவல் வெளியானது. இதனால் மீண்டும் ஜல்லிக்கட்டு போல் ஒரு போராட்டம் வெடித்துவிடக்கூடாது என தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமான போலீசார் இன்றும் குவிக்கப்பட்டுள்ளனர்.
12 இடங்களில் எண்ணை எடுக்கப்பட்டு வரும் கதிரமங்கலம் கிராமத்தில் குழாய்களை மாற்றி பரமாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது ஓஎன்ஜிசி நிறுவனம். இதனால் கதிராமங்கலம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணை கசிவால் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அந்த கிராம மக்கள் கடந்த 2 மாதமாக போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை எண்ணெய் கசிவு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கையுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்களின் அந்த போராட்டத்தில் தடியடி நடத்தி பலரையும் கைத்து செய்தனர் போலீசார்.
இதனையடுத்து அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கதிராமங்கலம் கிராம மக்கள் சென்னைக்கு வரவுள்ளதாகவும் அவர்கள், தலைமைச்செயலகம், கவர்னர் மாளிகை, பாஜக அலுவலகம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களை முற்றுகையிடப் போவதாகவும் நேற்று தகவல் பரவியது.
மேலும் மெரினாவிலும் போராட்டம் நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டதையடுத்து நேற்று அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இரண்டாவது நாளாகவும் இந்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் கூடியுள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் வழக்கத்தை விட போலீசார் அதிகளவில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் அதிகமாக உள்ளது.