மின்சார ரயிலில் இருந்து இறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணிக்கு பெண்ணுக்கு காவலர்கள் படிகட்டுகளாக மாறி உதவி செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் ஒன்று, சிக்னல் கோளாறு காரணமாக கோட்டை மற்றும் பூங்கா ரயில் நிலையங்களின் இடையே பாதி வழியில் நின்றது. இதனையடுத்து பெரும்பாலான பயணிகள் இறங்கிய நிலையில், படிகள் உயரமாக இருந்ததால், கர்ப்பிணி பெண் அமுதா, கீழே இறங்க முடியாமல் 2 மணி நேரமாக தவித்தார்.
இதையடுத்து, தமிழக காவல் துறையை சேர்ந்த தனசேகரன், மணிகண்டன் ஆகியோர், அமுதா கீழே இறங்க உதவி செய்தனர். ரயிலின் நுழைவு வாயிலில் இரு காவலர்களும் படிக்கட்டு போல குனிந்து நின்றனர்.
கர்ப்பிணி பெண் அமுதா, அவர்களின் முதுகின் மீது கால் வைத்து கீழே இறங்கினார். இதேபோல், முதியவர்கள் கீழே இறங்கவும் காவலர்கள் உதவி செய்தனர். காவலர்களின் மனித நேயத்துக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.