சாத்தான்குளம் காவலர்களை நீதிமன்ற பின்புறமாக அழைத்து வந்தபோது காவல்துறை வாகனம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரை மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் பின்புற வழியாக அழைத்து வர முயன்ற பொழுது நீதிமன்ற சுவரில் காவலர்கள் வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாகனம் லேசாக சேதம் அடைந்தது. ஆனால், காவலர்களுக்கு காயம் ஏதுமில்லை. ஆனால் அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு காயம் ஏற்பட்டது. மாவட்ட நீதிமன்றம் முகப்பு வாயிலில் புகைப்படம் எடுக்க அதிகமானோர் கூடி இருந்ததன் காரணமாக பின்பக்க வழியாக அழைத்து செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த சம்பவத்திற்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட காவலர்களை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 3 நாட்கள் காவல் முடிந்து ஜூலை 16 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு மீண்டும் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்த காவலில் இருக்கும் போது ரகு கணேஷ் மற்றும் ஸ்ரீதர் தினமும் 1 மணி நேரம் தங்களது வழக்கறிஞரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.