முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் நடிகர்கள் உள்பட பலருக்கு முதல்வர் கனவு எழ ஆரம்பித்துள்ளதால் கட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது இந்த வாரம் கமல்ஹாசன், இன்னும் ஒருசில வாரங்களில் ரஜினிகாந்த் அதன் பின்னர் உதயநிதி என பலர் தீவிர அரசியலில் குதிக்கவுள்ளனர்.
இந்த நிலையில் அரசியலில் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி வரவிருப்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய மு.க.அழகிரி, 'அரசியல் ஒரு சாக்கடை; யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம்' என்று கூறினார். அழகிரியின் இந்த கருத்து ஸ்டாலின் தரப்பினர்களை அதிருப்தி அடைய செய்திருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் மு.க.அழகிரி என்பதால் அவர் ரஜினி தொடங்கவிருக்கும் கட்சியில் சேர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதனை இரு தரப்பினர்களும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.