சிலை கடத்தல் வழக்கு சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்த பொன்.மாணிக்கவேல் பதவிகாலம் முடிந்ததை அடுத்து ஆவணங்களை ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் பழம்பெரும் கோவில்களில் உள்ள பழங்கால சிலைகள் பலவற்றை சிலை திருட்டு கும்பல் களவாடி சென்றபோது அவற்றை கண்டுபிடித்து மீட்க சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டவர் பொன்.மாணிக்கவேல். இதுவரை வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் இருந்த தமிழக சிலைகள் பலவற்றை மீட்டுக் கொண்டு வந்துள்ளார் பொன்.மாணிக்கவேல்.
தற்போது ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் உள்ள தமிழக சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை ஆஸ்திரேலிய பிரதமர் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து திரும்ப வழங்க இருப்பதாகவும் பொன்.மாணிக்கவேல் கூறியிருந்தார்.
இந்நிலையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது. பொன்.மாணிக்கவேலை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் சிலர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
பணிக்காலம் முடிந்த பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.