ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தம்பதி ஒருவரை போலீஸ் அதிகாரி எட்டி உதைத்ததால் தடுமாறி கீழே விழுந்த கர்ப்பிணி பெண் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் திருச்சி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
திருச்சியில் நேற்று இரவு 7 மணியளவில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்ப்பிணி பெண்ணுடன் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த வாகனத்தை நிறுத்துமாறு போலீஸ் ஒருவர் கைகாட்டினார். ஆனால் வாகன ஓட்டி போலீசை கவனிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மற்றொரு பைக்கில் விரட்டி சென்ற காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவர் பைக்கில் சென்ற தம்பதியினரை எட்டி உதைத்துள்ளார். இதனால் பைக்கை ஓட்டி வந்தவர் தடுமாறி சாலையில் கீழே விழுந்தனர். அந்த நேரத்தில் வந்த வேன் ஒன்று கர்ப்பிணி பெண் மீது மோதியதால் அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து அந்த பகுதி மக்கள் சுமார் 3 ஆயிரம் பேர்திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் இரவு முழுவதும் பெரும் பதட்டநிலை ஏற்பட்டிருந்தது.
இதுகுறித்த விசாரணையில் உயிரை இழந்த கர்ப்பிண் பெண் உஷா என்றும், அவரது கணவர் ராஜா என்பதும் தெரிய வந்துள்ளது. ராஜா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.