நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து சங்க தலைவர் விஷாலுக்கு எதிராக ஓரணியில் திரண்டனர். இதனால் தி.நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விஷால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி ஏ.எல் அழகப்பன், ரித்தீஸ், எஸ்வி சேகர் போன்றவர்கள் விஷாலுக்கு எதிராக சராமரியாக குற்றம் சாட்டினர். இதனையடுத்து விஷாலின் உதவியாளர் அங்கு வந்து எதிரணியினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சு வார்த்தையில் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால் எதிரணியினர் தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டி விட்டு சென்றுவிட்டனர்.
இந்நிலையில் இன்று தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டை உடைக்க முயன்று சட்டத்தை மீறியதற்காக சங்க தலைவர் விஷாலை போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று ஒரு திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைத்தனர்.விஷாலுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் மற்றும் அவரது தந்தை ஆகியோர் சங்கத்தின் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் மத்திய சென்னை மாவட்ட பதிவுத்துறை அதிகாரிகள் சேகர், செல்வசுந்தரி, ஆகியோர் தற்போது எதிரணியினர் போட்ட சங்க பூட்டை முறைப்படி திறந்தனர்.
ஆனால் எதிரணியினர் விஷாலுக்கு எதிராகவும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
இதில் முக்கியமாக எதிரணியினர் விஷால் மீது வைக்கும் குற்றச்சாட்டு என்னவெனில் அவர் சங்கத்தின் பணத்தை ரூ .7 கோடி அளவுக்கு கையாண்டுள்ளார் என்பதும் , இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை சென்னையில் நடத்துவதற்கு மற்ற தயாரிப்பாளர்களிடம் அனுமதி பெறவில்லை என்பது தான்.
இது குறித்து அமீர் கூறியதாவது :
’1800 உறுப்பினர்களைக்கொண்ட தாயாரிப்பாளர் சங்கம் மூன்று பிரிவுகளாக பிளவுபட்டுள்ளதாகவும்,பிரச்சனைகளை தீர்க்க தயாரிப்பாளர் சங்கம் தயாராக இல்லை.சங்க நிதி சம்பந்தமாக மட்டுமே விவாதிப்பது சரியாக இருக்காது.ஆரம்பத்தில் விஷாலுக்கு ஆதரவளித்தவர்கள் தான் தற்போது அவரை எதிர்க்கின்றார்கள்.’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.