சென்னையின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதையடுத்து, மீண்டும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன மழை பெய்தது. இது குறித்து மாநகராட்சி மற்றும் தமிழக அரசு இணைந்து, பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா பக்கம் நகர்ந்ததால், கனமழை மற்றும் பெருவெள்ளத்திலிருந்து சென்னை தப்பித்தது என்பதோடு, நேற்று காலை முதல் நல்ல வெயில் இருந்ததால், சென்னை மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் திடீரென சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக மந்தைவெளி, அடையாறு, வடபழனி, ஓ.எம்.ஆர் சாலை, கிண்டி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்கிறது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று வெயில் இருந்த நிலையில், இன்று மீண்டும் மழை பெய்து வருவதால் மீண்டும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.