டாக்டர் ராமதாஸ் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் படி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் முழுவதும் தங்கள் மக்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
கரோனா வைரஸ் தாக்குதலை முறியடிக்க ஊரடங்கு ஆணை நீட்டிக்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், அசாம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய 7 மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.
இவற்றில் மகாராஷ்டிராவைத் தவிர மற்ற 6 மாநிலங்களை விட தமிழ்நாடுதான் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிராதான் 1,018 பேருடன் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு 690 பேருடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
4 பேர் மட்டும் பாதிக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலமும், 10 பேர் மட்டும் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கரும், 26 பேர் மட்டும் பாதிக்கப்பட்ட அசாமும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதிலிருந்தே, அம்மாநிலங்களை விட மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி, ஒரு மனிதருக்கு கரோனா வைரஸ் நோய் ஏற்பட்டு, அவர் ஊரடங்கை மதிக்காமல் வலம் வந்தால், அவரிடமிருந்து மட்டும் ஒரு மாதத்தில் 406 பேருக்கு நோய்த் தொற்றும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒருவேளை ஊரடங்கு தளர்த்தப்பட்டு, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடினால் என்னவாகும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. இதுவே கரோனாவின் சமூகப் பரவலுக்கு வழிவகுக்கலாம்.
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களாக ஊரடங்கு ஆணையைச் செயல்படுத்துவதில் தமிழக அரசு நன்றாகவே செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு ஆணை குறித்து பிரதமர் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கூறியிருக்கிறார். இந்த நிலைப்பாடு நியாயமானதுதான்.
ஆனாலும், தமிழ்நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இன்னும் ஒரு படி மேலே போய் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். ஒருவேளை மத்திய அரசே ஊரடங்கை நீட்டிக்காவிட்டாலும் கூட, தமிழ்நாட்டில் கரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் வரை ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.