கோவை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 97 வார்டுகளை கைப்பற்றியன. அதிமுக வெறும் 3 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பரிந்துரையின் பேரில் 19வது வார்டு உறுப்பினர் கல்பனா ஆனந்த் குமாரை திமுக தலைமை மேயராக வெற்றி பெற செய்ய வைத்தது.
மேயராக பொறுப்பேற்றதில் இருந்து கல்பனா மீது, அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு முன்னும், பின்னும் திமுக மாமன்ற உறுப்பினர்களை மதிக்காமல் செயல்பட்டது, மாநகராட்சி மண்டல தலைவர்களுடன் இணக்கமாக இல்லாமல் மோதல் போக்குடன் செயல்பட்டது, நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் முறையாக வேலை பார்க்காமல் இருந்தது உள்ளிட்ட தொடர் புகார்கள் எழுந்தன. மேலும் அமைச்சர் கே.என்.நேருவுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்த நிலையில் கட்சி தலைமை அவரை மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் தனிப்பட்ட காரணத்திற்காகவும், உடல் நலத்தை கருத்தில் கொண்டும் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக அண்மையில் அவர் தெரிவித்திருந்தார். இதனால் கோயம்புத்தூர் மாநகராட்சியின் அடுத்த மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்த நிலையில், கணபதி பகுதியைச் சேர்ந்த 29வது வார்டு கவுன்சிலராக உள்ள ரங்கநாயகி மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ரங்கநாயகியை தவிர வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் கோவை மாநகராட்சி மேயராக அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்னர் தேர்தலில் வெற்றுபெற்றதற்கான சான்றிதழையும் அவர் பெற்றுக்கொண்டார்.