சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முதலாகவே பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நாளையும், நாளை மறுநாளும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் மக்கள் நேற்று முதலாகவே நூடுல்ஸ், பால் பாக்கெட்டுகள், காய்கறிகள் என கிடைத்தவற்றை அள்ளிக் கொண்டு செல்வதால் உணவு பொருட்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. ஏற்கனவே தக்காளி வரத்து மார்க்கெட்டுகளில் குறைவாக உள்ள நிலையில் மக்கள் அதிகமாக தக்காளி வாங்கி செல்வதால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி சில்லறை விற்பனை கடைகளிலேயே ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் பலரும் காய்கறிகளை அள்ளி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K