அழிந்து வரும் கலைகளை மீட்டெடுக்கும் விதமாக கோவையில் கோவில் திருவிழாவில் நடைபெற்ற ஒயிலாட்ட அரங்கேற்ற விழாவில் சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை ஒயிலாட்டம் ஆடி அசத்தினர்.
தமிழகத்தின் நாட்டுப்புற கலைகளில் மிக முக்கிய கலையாக ஒயிலாட்டம் உள்ளது.அழிந்து வரும் ஒயிலாட்ட கலையை மீட்டெடுக்கும் விதமாக இளம் தலைமுறையினர் தற்போது இக்கலைகளை கற்றுக்கொள்ள ஆர்வமாகி வருகின்றனர்.இக்கலையை, கோவை உட்பட கிராமந்தோறும் கொண்டு சேர்க்கும் வகையில்,கோவையை சேர்ந்த சிம்மக்குரல் ஒயிலாட்ட கலைக்குழு சார்பில் 5 வயது குழந்தைகள் துவங்கி பெரியவர்கள் வரை தொடர்ந்து பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை சரவணம்பட்டியை அடுத்த பெத்தநாயக்கன் பாளையம் ஸ்ரீ அம்மன் நகரில் பிரசித்தி பெற்ற ஜலக்கன் மாரியம்மன் கோவில் திருவிழாவில் அனைவருக்கும் ஒயிலாட்ட கலையை பறைசாற்றும் விதமாகவும்,இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது.
திறந்தவெளி அரங்கில் கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவில் கணபதி,சரவணம்பட்டி,அன்னூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஒயிலாட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.தமிழகத்தின் பாரம்பரிய கிராமிய கலை பயிற்சி பெற்றவர்கள் இணைந்து பம்பை இசை முழங்க,வண்ண ஆடைகளுடன் கூடி நின்று ஒயிலாட்டம் அரங்கேற்றம் நடத்தியது கூடியிருந்தவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.