தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நாளை மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை முடிந்து விட்ட நிலையில், கடந்த பல நாட்களாகவே மழை பெய்யவில்லை. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது;
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளது. அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒட்டியுள்ள கடலோர மாவட்டங்களில் நாளை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல், இரவில் குளிர் காற்று வீசும். அதேபோல், கடலோரப்பகுதிகளில் 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகம் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.