பழனி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் அந்த சேவை 40 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று, அதாவது அக்டோபர் 7ஆம் தேதி முதல், ரோப் கார் சேவை வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவதாகவும், எனவே பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிவழி பாதை, யானை பாதை ஆகியவற்றை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இரண்டு நிமிடங்களில் மலைக் கோயிலின் உச்சியை அடையும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ரோப் கார் வசதி, பக்தர்களுக்கு மிகுந்த வசதியாக இருந்தது. குறிப்பாக, வயதான பக்தர்கள் எளிதில் செல்லும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஒவ்வொரு வருடமும் பராமரிப்பு பணிகளுக்காக ஒரு மாதம் ரோப் கார் வசதி சேவை நிறுத்தப்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில், இன்று முதல் 40 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்களை பழனி மலை கோவில் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.