சமீபமாக ரவுடிகளை போலீஸார் சுட்டுப்பிடித்து வரும் நிலையில் என்கவுண்ட்டருக்கு பயந்து ரவுடிகள் சரணடையும் சம்பவம் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்கள் முன்னதாக கோவை நீதிமன்றம் முன்னால் ரவுடி கோகுல் என்பவரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோகுலை கொன்றவர்கள் குன்னூரில் பதுங்கியிருந்த நிலையில் பிடிக்க சென்ற போலீஸாரை தாக்கியதால் போலீஸார் இரண்டு ரவுடிகளை காலில் சுட்டு பிடித்தனர்.
அதுபோல சென்னை, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட பல பகுதிகளிலும் சமீப காலமாக தப்பி செல்ல முயலும் ரவுடிகளை போலீஸார் காலில் சுட்டு பிடித்து வருகின்றனர். தமிழக காவல்துறை மேற்கொண்டுள்ள ஆபரேஷன் பிடிவாரண்ட் மூலம் பல நாட்களாக விசாரணைக்கு ஆஜராகாத ரவுடிகள் பிடிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் கொலை செய்யப்பட்ட கோகுலின் நண்பரான சக ரவுடி கௌதம் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் போலீஸார் தன்னை சரணடையும்படியும், இல்லாவிட்டால் என்கவுண்ட்டர் செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் கூறி கதறும் அவர், தன்னை என்கவுண்ட்டர் செய்ய வேண்டாம் சரணடைந்து விடுகிறேன் என பேசியுள்ளார். அதன்படியே தற்போது அவர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சகிதம் சரணடைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல காவல்துறையின் கடும் நடவடிக்கைகளுக்கு பயந்து பல ரவுடிகள் அடுத்தடுத்து சரணடைந்து வருவதாக காவல்துறை வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.