ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது காவிரி விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக ஆர்.டி.ஐ தகவல் தெரிவித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்த நாட்கள் இன்றுவரை மர்மமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அதிமுக அமைச்சர்கள் மாறி மாறி ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்தித்தோம் என்றும்; சந்திக்கவில்லை என்றும் கூறியது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றுள்ளார். அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது காவிரி விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி அகற்றப்படுவதற்கு முன்பாக இதுதொடர்பாக சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்னதாக அவருக்கு தவறான மருந்துகள் தரப்பட்டதாக கூறுவது அவதுறான தகவல் என்று ஆ.ர்டி.ஐ மூலம் அளிக்கப்பட்ட விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.