பாடத்திட்டத்தில் இந்தி படிப்பை கொண்டு வருவதை தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்த்து வரும் சூழலில் அதுகுறித்து விமர்சித்து பேசியுள்ளார் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர்.
முன்னர் அ.தி.மு.க கட்சியில் இருந்த எஸ்.வி.சேகர் விலகி பாஜகவில் சேர்ந்தார். தற்போது பாஜகவில் இருக்கும் அவர் அடிக்கடி திமுக கட்சியினரோடு வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தான் அளித்த பேட்டி ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் “பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள் இந்தி படிப்பதில் என்ன தவறு? அவர்களுக்கு கணக்கு பிடிக்கவில்லையென்றால் கணக்கு திணிப்பா? அறிவியல் வரவில்லை என்றால் அறிவியல் திணிப்பா? அப்புறம் ஏன் இந்தியை மட்டும் திணிப்பு என்று பேசுகிறார்கள்.” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய அவர் ”நானும் 1966லே இந்தி எதிர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டவன்தான். இந்தி புத்தகங்களை ரோட்டில் போட்டு கொளுத்தி இருக்கிறென். ஆனால் இப்போது “அச்சா” என்ற வார்த்தைக்கு மேல் எனக்கு இந்தி தெரியவில்லை. ஆனால் இங்கிருந்து பல தமிழர்கள் இந்தி கற்றுக்கொண்டு வெளிமாநிலங்களில் நல்ல வேலைகளில் உள்ளனர். அவர்கள் இந்த போராட்டங்களை பார்த்து காறி துப்புகிறார்கள். நீங்கள் உங்கள் குடும்பமெல்லாம் இந்தி கற்று கொள்ளலாம், ஆனால் ஏழைகள் இந்தி கற்றுக்கொண்டு முன்னேற கூடாதா?” என்று பேசியுள்ளார்.
நீங்கள் என்று அவர் யாரை குறிப்பிட்டு பேசினார் என்று தெரியவில்லை. ஆனால் பேச்சில் எந்த இடத்திலும் அவர் குறிப்பிட்ட கட்சியின் பெயரை கூறவில்லை. மொத்தமாக இந்தி எதிர்ப்பாளர்கள் என்றே பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.