தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பெரிய அளவிலான வணிக வளாகங்கள், துணிக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் பின்வாசல் வழியாக வியாபாரம் செய்த பிரபல ஜவுளிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் 3 ஆயிரம் சதுர அடிக்கு அதிகமான ஜவுளி, சூப்பர் மார்க்கெட்டுகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூரில் கலெக்டர் அலுவலகம் அருகே சர்வீஸ் சாலையில் இயங்கி வரும் பிரபல துணிக்கடையான சென்னை சில்க்ஸ் முன்பக்கம் கதவை மூடிவிட்டு பின்பக்கம் வழியாக வாடிக்கையாளர்களை உள்ளே அழைத்து வியாபாரம் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் மாநகராட்சி கமிஷனர் உடனடியாக சென்று கடைக்கு சீல் வைத்ததுடன், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளார். மீண்டும் இதுபோன்ற தவறுகளை செய்தால் மூன்று மாதகாலத்திற்கு கடையை திறக்க முற்றிலும் தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.