சசிகலா முதல்வராவதில் சிக்கல்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு!
சசிகலா முதல்வராவதில் சிக்கல்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு!
தமிழக முதல்வராக சசிகலா விரைவில் பதவியேற்க உள்ள நிலையில் தற்போது அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வரும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா இருக்கும் போது அவருக்கு கடும் நெருக்கடியாக இருந்த சொத்துக்குவிப்பு வழக்கு தற்போது சசிகலாவுக்கும் நெருக்கடியாக உள்ளது. கீழ் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கர்நாடகா உயர் நீதிமன்றத்தை நாடி விடுதலை பெற்றது.
இதனை எதிர்த்து கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு மட்டும் வழங்கப்படாமல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் மரணமடைந்தார்.
இந்நிலையில் சசிகலா முதல்வராக பதவியேற்க உள்ள சூழலில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு எப்போது வழங்குவீர்கள் என வழக்கறிஞர்கள் கேட்டதற்கு இன்னும் ஒரு வாரம் பொருத்திருங்கள் தீர்ப்பு வழங்கி விடுகிறோம் என நீதிபதிகள் இன்று கூறியுள்ளனர்.
ஒரு வாரத்தில் தீர்ப்பு வெளியாகி அதில் சசிகலா தண்டிக்கப்பட்டால் அவர் சிறை செல்ல நேரிடும், தேர்தலில் நிற்க முடியாது முதல்வராவதிலும் சிக்கல் ஏற்படும். பன்னீர்செல்வத்தின் ராஜினாமா குறித்தும், சசிகலா முதல்வராக பதவியேற்க உள்ளது குறித்தும் ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்னும் பதில் கூறாத நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்தில் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.