பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை சீண்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கும் சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு அளிப்பவர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. தமிழகத்திலும் இது போல நடக்க வாய்ப்புள்ளது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசியதற்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார் சீமான்.
சீமான் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, மாணவர்கள் மீது குண்டு விழும் என்றார்கள், சீமான் கறி கிடைக்கும் என்றார்கள். இப்போது டெல்லியில் நடந்தது போல தமிழகத்திலும் நடக்கும் என்கிறார்கள். ஜனநாயக வழியிலான அமைதியான் அறப்போராட்டத்திற்கு மிரட்டல் விடுக்கிறார்கள்.
கை கால்களோடு மட்டுமல்ல வாளோடும் வேலோடும் முந்தோன்றிய மூத்தக்குடியின் மக்கள் நாங்கள். நினைத்தையெல்லாம் செய்து முடித்து கலவரம் செய்து ஆட்டம் போட இது வடநாடு அல்ல; தமிழ்நாடு. எங்களது பெருந்தன்மையும், பொறுமையும்தான் உங்களது இருப்பை நிலைக்கொள்ள செய்திருக்கிறது.
இங்கிருக்கும் இஸ்லாமிய சொந்தங்கள் எங்கோ இருந்து வந்தவர்கள் அல்ல, காலங்காலமாக நீடித்து நிலைத்து வாழும் இம்மண்ணின் பூர்வகுடிகள், எங்கள் உடன்பிறந்தவர்கள், எங்களது இரத்த உறவுகள். இஸ்லாமியர்கள் தமிழர்களாகவில்லை. தமிழர்கள் நாங்கள் தான் இஸ்லாத்தை ஏற்றிருக்கிறோம்.
அவர்களை தொட வேண்டும் என நினைத்தால் அதற்குமுன் எங்களை எதிர்கொள்ள வேண்டும், எங்களை தாண்டிதான் அவர்களை நெருங்க முடியும் என கூறி ஃபைனல் டச்சாக நரி ஊருக்குள்ள வந்ததே தப்பு! இதுல ஊளையிட்டுக்கிட்டே வேற வருதா? என குறிப்பிட்டுள்ளார்.