கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து முதலில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையிடம் விசாரிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் முபின் என்ற நபர் பலியானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலியான முபினின் வீட்டிலிருந்து ஏராளமான வெடிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து ஆளும் திமுக மீது எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றன. இந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து தமிழக அரசை அவர் விமர்சித்து வருகிறார்.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்து பேசியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி “கோவையில் கார் வெடிப்பு சம்பம் நடந்து 12 மணி நேரத்திற்குள் இயல்பு நிலை திரும்பிவிட்டது. காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தனர்.
ஆனால், ஏதோ பதற்றம் நிலவுவது போல சிலர் செய்தி வெளியிடுவது கண்டனத்திற்குரியது. சிலர் குறுகிய மனப்பான்மையுடன் கருத்து தெரிவிக்கின்றனர். புலன் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது காவல்துறைக்கு முன்பாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தகவல்களை வெளியிட்டது ஏன்? தேசிய புலனாய்வு அமைப்பு முதலில் பாஜக தமிழக தலைவரைதான் விசாரிக்க வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார்.