லைகா நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவிக்கச் சவுக்கு சங்கருக்கு விதித்த இடைக்காலத் தடையை ஜூன் 6ஆம் தேதி வரை நீட்டித்து, வழக்கு தொடர்பாகச் சவுக்கு சங்கர் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுக்கு சங்கர் தனது சவுக்கு மீடியா யூடியூப் பக்கத்தில் லைகா நிறுவனத்தைப் போதை கடத்தல் கும்பலுடன் தொடர்புப்படுத்திப் பேசியுள்ளதாகக் கூறி, லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும், நற்பெயரைக் கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதால், 1 கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வீடியோ மூலம் கிடைத்த தொகையை டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டுமெனவும், யூடியூப் பக்கத்தில் உள்ள வீடியோ நீக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவிக்கச் சவுக்கு சங்கருக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
இந்த வீடியோக்கள் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த யூடியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, யூடியூப் தரப்பில், லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர் பேசிய வீடியோவை முடக்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி வழக்கு தொடர்பாகச் சவுக்கு சங்கர் பதிலளிக்க உத்தரவிட்டும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை ஜூன் 6ஆம் தேதி வரை நீட்டித்தும் விசாரணையைத் ஒத்தி வைத்தார்.