Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை: தமிழர் பள்ளிகளில் சாதி பாகுபாடு நிலவுகிறதா? 200 பள்ளிகள் மூடப்பட என்ன காரணம்?

Srilanka
, செவ்வாய், 25 ஜூலை 2023 (22:05 IST)
இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில் சுமார் 200 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். கல்விக்கு வழங்கும் நிதியைக் குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அதனாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
ஆனால், வடக்கு மாகாணத்தில் 113 பாடசாலைகள் மட்டுமே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ரி. ஜோன் குயின்ரஸ் பிபிசி தமிழிடம் கூறுகின்றார்.
 
"யுத்தம் முடிவடைந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்றத் திட்டத்தின் பின்னர் 62 பாடசாலைகள் திறக்கப்படவில்லை" என அவர் தெரிவித்தார்..
 
ஏனைய பாடசாலைகள் மாணவர் தொகைக் குறைவினாலும், நகரத்தை நோக்கி மாணவர்கள் இடம்பெயர்ந்தமைக் காரணமாகவும் மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
வடக்கிலுள்ள அரச பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் 500 தொடக்கி 600 வரையில் குறைவடைந்து வருவதாகத் தெரிவித்த அவர்; அந்த மாகாணத்திலுள்ள தமிழர்களின் சனத்தொகையில் ஏற்பட்ட வீழ்ச்சி இதற்கு முக்கிய காரணம் என்கிறார்.
 
 
சாதி மற்றும் சமயங்களால் நீண்டகாலம் மக்கள் பிரிந்து போயிருந்தனர். இப்போது அந்த நிலைமை படிப்படியாக குறைந்து வருகிறது என்கிறார் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ரி. ஜோன் குயின்ரஸ்
 
வடக்கிலுள்ள 986 பாடசாலைகளில் கிட்டத்தட்ட 180 பாடசாலைகள் 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ளதாகவும் அவர் தகவலளித்தார்.
 
இவற்றில் வவுனியா மாவட்டத்தில் மட்டும் 50 பிள்ளைகளுக்கும் குறைவான 46 பாடசாலைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
இதேவேளை மீள்குடியேற்றத்தின் பின்னர் 42 புதிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் - வேறு பகுதிகளை நோக்கி நகர்ந்தமையினால் இவ்வாறு புதிய பாடசாலைகளை உருவாக்க வேண்டிய தேவை எழுந்ததாகவும் அவர் பிபியிடம் தெரிவித்தார்.
 
"சாதி மற்றும் சமயங்களால் நீண்டகாலம் மக்கள் பிரிந்து போயிருந்தனர். இப்போது அந்த நிலைமை படிப்படியாக குறைந்து வருகிறது. அதனால் சாதிய ரீதியிலான பாடசாலைகள் என்பதை மக்கள் இப்போது கருத்தில் எடுப்பதில்லை. இதனால் எல்லோரும் எல்லாப் பாடசாலைகளிலும் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவும் பாடசாலைகள் மூடப்படுவதற்கு பிரதான காரணங்களில் ஒன்றாகும்" என, கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் கூறுகிறார். .
 
இவ்வாறு தற்காலிகமாக மூடப்படும் பாடசாலைகளின் வளங்கள், அருகிலுள்ள பாடசாலைகளுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்
 
 
சாதிப் புறக்கணிப்பு இன்னும் வடக்கிலுள்ள கிராமப்புறங்களில் அதிகமாகவே உள்ளது என்கிறார் மறைந்த எழுத்தாளர் கே. டானியல் அவர்களின் மகன் - சாம் டானியல்.
 
வடக்கில் பாடசாலைகள் மூடப்படுவதற்கு சாதிப் பாகுபாடு குறைந்ததமையும் ஒரு காரணம் என - வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்தமை குறித்தும், களத்தில் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டும் வடக்கிலுள்ள சிலருடன் பிபிசி தமிழ் பேசியது.
 
மறைந்த எழுத்தாளர் கே. டானியல் அவர்களின் மகன் - சாம் டானியல் இது குறித்து பேசுகையில்; கிராமப் புறங்களிலுள்ள மாணவர்களின் சாதி அடையாளத்தை மறைப்பதற்காகவே அவர்களை நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு பெற்றோர் அனுப்புவதாகவும், சாதிப் புறக்கணிப்பு இன்னும் வடக்கிலுள்ள கிராமப்புறங்களில் அதிகமாகவே உள்ளது எனவும் தெரிவித்தார்.
 
1984ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டு வரை, அரச பாடசாலைகளில் ஆசிரியராகக் கடமையாற்றிய சாம் டானியல், தற்போது ஆசிரியத் தொழிலை துறந்துவிட்டு, தனது தந்தையின் பெயரில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருகின்றார். சாதியப் பாகுபாடுகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் சாம் டானியல் தொடர்ச்சியாகவும் உரத்தும் பேசி வருகின்றார்.
 
"நகர்ப்புறப் பாடசாலைகளில் சாதிப் பாகுபாடுகள் சொல்லும்படியாக இல்லை. ஆனால் கிராமப் புறங்களில் 'இந்த' சாதியினருக்கு 'இந்த'ப் பாடசாலை எனும் நிலைமை இன்னும் உள்ளது. அங்கு தாழ்த்தப்பட்ட சாதியினர் - 'குறித்த' சில பாடசாலைகளுக்குத்தான் செல்லலாம்.
 
 
பாடசாலைகளில் மாணவர்கள் சாதி வேறுபாடுகள் பார்க்காமல் பழகினாலும், பல்கலைக்கழகங்களில் சாதிப் பாகுபாடு பார்க்கும் மனநிலை வந்துவிடுகிறது என்கிறார் சாம் டானியல்
 
கிராமப்புறங்களில் இவ்வாறான சாதிப் பாகுபாடு இன்னும் உள்ளமையினால், தாழ்த்தப்பட்ட சாதியினர் எனக்கூறப்படுவோர் தங்களின் அடையாளத்தை மறைக்க விரும்புகின்றனர். 'குறித்த' பாடசாலையில் தங்கள் பிள்ளை படித்தால், அவரின் சாதி அடையாளம் தெரிந்துவிடும் என்பதால், தாழ்த்தப்பட்ட சாதியினரில் கணிசமானோர் - உயர்ந்த சாதியினர் எனக் கூறப்படுவோரின் பிள்ளைகள் படிக்கும் நகரப் பாடசாலைகளில் தமது பிள்ளைகளை சேர்த்து விடுகின்றனர். இதன் காரணமாகத்தான், கிராமப்புறத்திலுள்ள சில பாடசாலைகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து அவை மூடப்படுகின்றன" என்கிறார் சாம் டானியல்.
 
அப்படியென்றால் நகரப் பாடசாலைகளில் சாதி பேதங்களை மறந்து, ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ளும் மனநிலை உள்ளதா? என அவரிடம் பிபிசி கேட்டபோது; "அப்படியில்லை, கிராமத்திலிருந்து நகரப் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் சாதி பற்றி அங்குள்ளவர்களுக்குத் தெரியாது. மறுபுறம் மாணவர்கள் மத்தியில் சாதிப் பாகுபாடு சற்று குறைந்தும் விட்டது. ஆனால், உயர்ந்த சாதியினர் எனக் கூறப்படுவோர் - தமது பிள்ளைகளிடம் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களுடன் சேரக்கூடாது எனக் கூறுவதுண்டு. அதனை சில மாணவர்கள் கேட்பதில்லை. ஆனால் பெற்றோர்களுக்குப் பயந்து அவ்வாறான நண்பர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வதை தவிர்ப்பார்கள். இருந்தும் வெளியில் நல்ல நண்பர்களாக பழகுவர்” என கூறுகின்றார்.
 
இவ்வாறு பாடசாலைகளில் மாணவர்கள் சாதி வேறுபாடுகள் பார்க்காமல் பழகினாலும், பல்கலைக்கழகங்களில் சாதிப் பாகுபாடு பார்க்கும் மனநிலை வந்துவிடுகிறது என்றும், குறிப்பாக திருமணத்தின் போது கட்டாயம் சாதி பார்க்கப்படுவதாகவும் சாம் டானியல் தெரிவிக்கின்றார்.
 
 
சைவப்பாடசாலைகளில் சாதிப் பாகுபாடு அதிகம் உள்ளது என்கிறார் நாடக கலைஞர் சீலன்
 
வடக்கிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டமைக்கு சாதி அடிப்படையிலான பிரிவினைகள் குறைந்து வருகின்றமையும் ஒரு காரணம் என, அந்த மாகாணத்தின் கல்விப் பணிப்பாளர் கூறும் நிலையில், ”பாடசாலைகள் மூடப்பட்டமைக்கு சாதிய ஒடுக்கு முறைதான் காரணம்” என்கிறார் நாடக கலைஞர் சீலன். இவர் - சாதியப் பாகுபாட்டுக்கு எதிரான இயங்கும் களச் செயற்பாட்டாளர்.
 
நகரப் பாடசாலைகளில் சாதியப் புறக்கணிப்புகள் பெரிதாக இல்லை என்றாலும் கூட, கிராமப் பாடசாலைகளில் சாதி ரீதியிலான பாகுபாடுகள் அதிகம் உள்ளது என - அவர் கூறுகின்றார்.
 
”நகரிலுள்ள கணிசமான பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக பெற்றோரிடம் 01 லட்சம் ரூபா வரையில் 'டொனேஷன்' (அன்பளிப்பு) பெறப்படுகிறது. அவ்வாறு பெருந்தொகை டொனேஷன் கொடுத்து சேரும் மாணவர்கள் - தாழ்த்தப்பட்டவர்கள் என்றாலும் கூட மரியாதையாகவே நடத்தப்படுகின்றனர். சாதிப் புறக்கணிப்பிலிருந்து தப்பிப்பதற்காக தாழ்த்தப்பட்ட மக்கள் தமது பிள்ளைகளை என்ன கஷ்டப்பட்டாவது இவ்வாறான நகரப் பாடசாலைகளில் சேர்த்து விடுகின்றனர்" என சீலன் குடுப்பிடுகின்றார்.
 
கிராமப் புறங்களிலுள்ள பாடசாலைகளில் பௌதீக வளங்கள் இருந்தாலும் கூட, அங்குள்ள பிள்ளைகள் ஏன் அந்தப் பாடசாலைகளுக்குச் செல்லாமல், நகரப் பாடசாலைகளை நோக்கிச் செல்கின்றனர் எனக் கேள்வியெழுப்பும் சீலன்; "சாதிய ஒழுக்குமுறையே அதற்கான காரணம்" என்கிறார்.
 
சில பாடசாலைகளில் உயர்ந்த சாதியினரே அதிபராக வரலாம் என்கிற எழுதப்படாத விதி - பரம்பரை பரம்பரையாக இன்னும் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
 
”யாழ்ப்பாணம் - வேலணையிலுள்ள பாடசாலையொன்றுக்கு அண்மையில் அனைத்து தகுதிகளையும் கொண்ட அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், அந்தப் பாடசாலை சமூகத்தவர்கள் அந்த அதிபரை வருவதற்கு விடாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அந்த அதிபர் கிறிஸ்தவர் என்பதாலும் அவரின் சாதியை காரணமாகக் கொண்டுமே அவர் தடுக்கப்பட்டார்" என சீலன் குறிப்பிடுகின்றார்.
 
 
வடக்கிலுள்ள பாடசாலைகளில் சாதி ரீதியான நடைமுறைகள் 80 சத வீதத்திலிருந்து 20 வீதம் வரை குறைந்துள்ளது எனகிறார் மாகாண கல்விப் பணிப்பாளர்
 
வலிகாமம் கிழக்கு பகுதியில் தாழ்த்தப்பட்டவர்களாக கூறப்படும் சமூகத்தவர்களே அதிகம் வாழ்வதாக கூறும் சீலன், அங்குள்ள சில பாடசாலை மூடப்படும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
 
”நகரப் பாடசாலைகளுக்கு செல்ல முடியாத ஏழைப் பிள்ளைகளே அங்கு படிக்கின்றனர். அங்குள்ள அநேகமான மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிடுகின்றனர். ஒருசிலரே தப்பிப்பிழைத்து உயர்கல்வி (12ஆம் வகுப்பு) வரையில் செல்கின்றனர்.
 
ஒரு மாணவர் தொடர்ச்சியாக குறிப்பிட்ட சில நாட்கள் பாடசாலைக்கு வரவில்லை என்றால், அவரைத் தேடிச்சென்று பாடசாலைக்கு அதிபர், ஆசிரியர்கள் அழைத்து வர வேண்டும். ஆனால், அங்குள்ள சில பாடசாலை ஆசிரியர்கள் அதைச் செய்வதில்லை. அந்த மாணவர்கள் விடயத்தில் அக்கறையெடுக்க மாட்டார்கள். உயர் சாதி எனக் கூறப்படுகின்றவர்களே அங்குள்ள ஆசிரியர்களில் அதிகமானோராக உள்ளனர்" என்கிறார்.
 
சைவப்பாடசாலைகளில் சாதிப் பாகுபாடு அதிகம் உள்ளது என்றும், ஆனால் கிறிஸ்தவப் பாடசாலைகளில் சாதிப்புறக்கணிப்பு இல்லை எனவும் சீலன் குறிப்பிடுகின்றார்.
 
இதேவேளை உயர்ந்த சாதியினர் எனக் கூறப்படும் சில அதிபர்களும் ஆசிரியர்களும், ஒடுக்கப்பட்ட சாதியினைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியில் மிகவும் அக்கறையெடுத்துச் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.
 
"பிள்ளைகள் வறுமை காரணமாக பாடசாலைக் கல்வியை நிறுத்தி விடக் கூடாது என்பதற்காக, வெளிநாட்டிலுள்ளவர்களிடம் நிதியுதவி பெற்று ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு சப்பாத்து மற்றும் உணவு போன்றவற்றை வழங்கும் உயர்ந்த சாதியினர் எனக் கூறப்படும் அதிபர்களும் உள்ளனர்" எனக் கூறிய சீலன், நீர்வேலி வடக்கு பகுதியிலுள்ள பாடசாலையொன்றினை இதற்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடுகின்றார்.
 
 
எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணம் கடற்கரைப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு, யாழ்ப்பாணம் நகரிலுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளை அனுப்புவதில்லை என்கிறார் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸி
 
சைவப் பாடசாலைகளில் சாதிப்பாகுபாடு அதிகமாக உள்ளதாக நாடகக் கலைஞர் சீலன் தெரிவித்தமை குறித்து, வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, சமயம் சார்ந்த தலைவர்களால் நெறிப்படுத்தப்படுகின்ற பாடசாலைகளில் பண்பு மற்றும் பழக்கவழக்க ரீதியாக சில இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக கூறினார்.
 
”1962ஆம் ஆண்டு மிஷனரிமார்களால் சில பாடசாலைகள் கையளிக்கப்பட்டபோது, அந்தப் பாடசாலைகளின் சம்பிரதாய பழக்க வழக்கங்கள் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் வேறு சமயம் சார்ந்தவர் அதிபராக இருக்க முடியாது. அது எழுதப்படாக ஒரு நியமமாக இருந்து வருகிறது” என்றார்.
 
”சைவப் பாடசாலைகளில் சேர் (Sir) பொன் ராமநாதன், சேர் (Sir) பொன். அருணாசலம் போன்றோரின் காலத்தில் சைவப் பாரம்பரியங்கள் இருந்தன. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் மிஷனரிமார்கள் காலத்தில் சில பாடசாலைகள் கட்டப்பட்டு அங்கும் சில நியமங்கள் பின்பற்றப்பட்டன. ஆனால் அந்தப் பாடசாலைகளுக்கு தலைமையத்துவத்தை வழங்கக் கூடிய கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அதிபர்களின் பற்றாக்குறை இன்றுவரை உள்ளது. அதனால் கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளில் அந்த சமயம் சார்ந்தவர்கள்தான் அதிபர்களாக இருக்க வேண்டும் எனும் நியமம் இப்போது பல பாடசாலைகளில் இல்லாமல் போய்விட்டது. அங்கு யாரும் அதிபராக இருக்கலாம் எனும் நிலை வந்துவிட்டது” எனவும் அவர் தெரிவித்தார்.
 
வடக்கிலுள்ள பாடசாலைகளில் சாதி ரீதியான நடைமுறைகள் 80 சத வீதத்திலிருந்து 20 வீதம் வரை குறைவடைந்துள்ளது எனக் கூறிய மாகாண கல்விப் பணிப்பாளர், கிராமப் புறங்களில் குறிப்பிட்ட சில சாதியினர் அல்லது தொழில் செய்வோர் படிக்கும் பாடசாலைகளுக்கு உயர் சாதியினர் எனக் கூறப்படுவோர் தமது பிள்ளைகளை அனுப்புவதில்லை என குறிப்பிட்டார்.
 
”எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணம் கடற்கரைப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு, யாழ்ப்பாணம் நகரிலுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளை அனுப்புவதில்லை. அதேபோன்று நகரிலுள்ள ஆசிரியர்ளும் அவ்வாறான பாடசாலைகளுக்குச் செல்ல விரும்புவதில்லை” என கூறிய அவர், ”இதனை சிலரின் பாரம்பரியமாகவும் மன ரீதியான விடயமாகவுமே பார்க்க முடிகிறது” என்றார்.
 
 
ஒரு பாடசாலையில் 10 மாணவர்கள் இருந்தாலும், அவர்களுக்கு கல்வியை வழங்க வேண்டியது அரசின் கடமை. அதிலிருந்து அரசு விலகிச் செல்ல முடியாது என்கிறார் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்
 
இது இவ்வாறிருக்க மாணவர்கள் தமது கல்வியை கைவிடுவதற்கு சாதிப் புறக்கணிப்பை விடவும், வறுமையே காரணமாக உள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகின்றார்.
 
இலங்கையில் 10,175 பாடசாலைகள் இருப்பதாகவும், அவற்றில் 100 மாணவர்களுக்கும் குறைந்த பாடசாலைகள் 3000 உள்ளன எனவும் அவர் குறிப்பிடுகின்றார். "இவ்வாறு மாணவர் தொகை குறைந்த பாடசாலைகளை மூடும் யோசனையில்தான் அரசு இருக்கின்றது" என அவர் தெரிவிக்கின்றார்.
 
மாணவர் எண்ணிக்கை குறைந்த பாடசாலைகளுக்கு வளங்களைக் கொடுக்காமல் அவற்றை மூடும் நிலையை அரசு உருவாக்குவதாகவும் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகின்றார்.
 
”ஒவ்வொரு பிரதேசத்திலும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு காரணங்கள் உள்ளன. சில பாடசாலைகளிலுள்ள மாணவர்களை எக்காரணம் கொண்டும் நகரப் பாடசாலைகளுக்குச் செல்ல மாட்டார்கள். வறுமை நிலை அதற்குப் பிரதான காரணம். எனவே, ஒரு பாடசாலையில் 10 மாணவர்கள் இருந்தாலும், அவர்களுக்கு கல்வியை வழங்க வேண்டியது அரசின் கடமை. அதிலிருந்து அரசு விலகிச் செல்ல முடியாது" என்கிறார்.
 
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதற்கு சாதி பாகுபாட்டை விடவும் வறுமையே பிரதான காரணியாக உள்ளது என ஜோசப் ஸ்டாலின் கூறுகின்றார்.
 
மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைவதால் பாடசாலைகள் மூடப்படுவதாக அரசு கூறுகின்றது. ஆனால், மாணவர் எண்ணிக்கை ஏன் குறைகிறது என்பதை தேடிப்பார்த்து, அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அதனை நிவர்த்தி செய்வதற்கு அரசு ஏன் முயற்சிக்கவில்லை என, அவர் கேள்வியெழுப்புகின்றார்.
 
'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' என, அரசு கூறிக்கொண்டே, கிராமப்புற மாணவர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளை மூடும் செயற்பாடுகளைத்தான் அரசு செய்து வருகின்றது எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகின்றார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்ணை அழைத்துச் சென்ற ரேபிடோ பைக் டாக்சி ஓட்டுநர் சுய இன்பம்!