புதுக்கோட்டை அருகே வாக்குச்சாவடியில் இருந்து வாக்குப்பெட்டியை மர்ம கும்பல் தூக்கி கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்துக்கான தலைவர் பதவிக்கு முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. மூளிப்பட்டி பகுதியில் உள்ளவர்கள் வாக்களிக்க அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. காலையிலிருந்து மக்கள் பலரும் ஆர்வமாய் வாக்களித்து வந்தனர்.
மாலை 5 மணிக்கு வாக்கு செலுத்தும் நேரம் முடிவடைந்ததை அடுத்து வாக்குசாவடி தலைமை அலுவலர் வாக்குப்பெட்டிக்கு சீல் வைத்து விட்டு, பதிவான வாக்குகள் குறித்த விவரங்களை சரிபார்த்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது பள்ளிக்குள் நுழைந்த மூன்று பேர் வாயிலில் இருந்த காவலரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். திடீரென வாக்குச்சாவடிக்குள் புகுந்தவர்கள் வாக்குப்பெட்டியை தூக்கி கொண்டு ஓட ஆரம்பித்தனர்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் உடனடியாக அவர்களை துரத்தி கொண்டு சென்றுள்ளனர். பெட்டியை தூக்கி கொண்டு ஓடியவர்கள் ஒரு முட்புதரில் வீசிவிட்டு ஓடி மறைந்துள்ளனர். வாக்குப்பெட்டியை மீட்டெடுத்த காவலர்கள் அதை வாக்குசாவடி அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.
வாக்குப்பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடியவர்களில் ஒருவரான மூர்த்தி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருட்டில் ஈடுப்பட்டபோது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.