ஸ்டெர்லைட் ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்தது. மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வந்தன.
இதனால் கடும் கொந்தளிப்பில் இருந்த பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூட வலியுறுத்தியும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
57 வது நாளாக இந்த போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், பொதுமக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் வரை இங்கிருந்து நகர மாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.