வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற 2 ஆயிரம் குமரி மாவட்ட மீனவர்களின் கதி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
3 மாதங்களுக்கு முன்பு ஓகி புயல் காரணமாக கன்னியாகுமாரி மாவட்ட மீனவர்கள் பலர் உயிரிழந்தனர். பலரை காணவில்லை. இந்நிலையில், தென் மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து, தீவிர காற்றழுத்த மண்டலமாக மாறியுள்ளது. இதனால், கடலோரப் பகுதிகளில் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசிக்கொண்டிருக்கிறது. ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பிருப்பதால், வருகிற 15ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஆனால், ஏற்கனவே கடலுக்கு சென்று ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்களுக்கு புயல் எச்சரிக்கை தெரியாது. அவர்களை செல்போன் மூலமாக தொடர்பு கொள்ள முடியாது எனக் கூறப்படுகிறது.
மொத்தமாக, குமரி மாவட்டத்தை சேர்ந்த 200 விசைப்படகுகளில், 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்றுள்ளனர். அவர்களி கதி என்ன என அவர்களின் குடும்பத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர். ஓகி புயலில் ஏற்பட்டது போல் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டு விடுமோ என அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.