வேளச்சேரி - பெருங்குடி இடையில் ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப்பை வைத்து ரயிலை கவிழ்க்கும் முயற்சி 5 நாட்களில் இரண்டு முறை நடந்துள்ளது. எனவே சம்பவ இடத்தில் கூடுதல் டிஜிபி ஆய்வு நடத்தினார்.
சென்னையில் வேளச்சேரியிலிருந்து கடற்கரை வரை பறக்கும் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் தற்போது அதிக அளவில் பயணிகள் பிரயாணம் செய்ய ஆரம்பித்துள்ளனர். பறக்கும் ரயில்சேவை புறநகர் ரயில் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரயில் சேவையை அதிக அளவில் பயணிகள் பயன்படுத்தினாலும் பராமரிப்பு சரியில்லை என்பது பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
ரயில் நிலையங்களில் போதிய பராமரிப்பு, பாதுகாப்பின்மை காரணமாக சமூக விரோதிகள் அதை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. சில இடங்களில் வழிப்பறி நடக்கிறது.
குறிப்பாக பெருங்குடி, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், திருவல்லிக்கேணி கோட்டூர்புரம் உள்ளிட்ட ஸ்டேஷன்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் ஸ்டேஷன்களாக பாதுகாப்பின்றி உள்ளதாக பயணிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எரியாத மின் விளக்குகள், போலீஸ் பாதுகாப்பற்ற ஸ்டேஷன்கள், சமூக விரோதிகள் ஆக்கிரமிப்பு என இந்த ஸ்டேஷன்கள் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு ஏற்றார்போல் சில சம்பவங்களும் நடந்துள்ளது.
வேளச்சேரி, வேளச்சேரி-பெருங்குடி இடையே கடந்த மாதம் 31-ம் தேதி விஷமிகள் சிலர் ரயிலை கவிழ்க்கும் நோக்கில் சிமெண்டால் ஆன சிலாப் ஒன்றை, தண்டவாளத்தின் மீது வைத்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மின்சார ரயில் ஓட்டுநர் இதைப்பார்த்து ரயிலை நிறுத்திவிட்டார்.
சிமெண்ட் சிலாப் வைக்கப்பட்டது குறித்து திருவான்மியூர் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டனர், இந்நிலையில் நேற்று ரயில்வே கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தண்டவாளப் பகுதியில் ஆய்வு செய்தார். வேளச்சேரி முதல் பெருங்குடி வரையிலான இரண்டரை கிலோ மீட்டர் தண்டவாளத்தில் நடந்தே சென்று ஆய்வு செய்த அவர் எங்கு பிரச்சினை உள்ளது என்பதை கண்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
பல இடங்கள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதை அறிந்த அவர் அப்பகுதிகளில் வெளிநபர்கள் யாரும் நுழையாதபடி இருபுறமும் தடுப்புகள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர் ஆய்வு செய்து சென்ற மறுநாளே மீண்டும் தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப்புகளை மர்ம நபர்கள் வைத்துள்ளனர்.
இம்முறை பெருங்குடி-தரமணி ரயில்நிலையங்களுக்கு இடையில் உள்ள தண்டவாளத்தில் சிமென்ட் ஸ்லாப்பை வைத்துவிட்டு சென்றுள்ளனர். அப்போது வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற பறக்கும் ரயிலின் ஓட்டுனர் தண்டவாளத்தில் ஸ்லாப் ஒன்று இருப்பதை பார்த்து வேகத்தை குறைத்தும் ரயில் சிமென்ட் ஸ்லாப்பின் மீது ஏறி இறங்கியது.
அதிர்ஸ்டவசமாக ரயிலுக்கு ஒன்றும் நேரவில்லை, ஸ்லாப் உடைந்தது. இதையடுத்து ரயிலை நிறுத்திய ஓட்டுநர், ரயில்வே பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர். சக்கரம் ஏறி நொறுங்கி கிடந்த சிமென்ட் ஸ்லாப்பை ஆய்வு செய்தனர். பின்னர் 10 நிமிடங்கள் கழித்து ரயில் கடற்கரை நோக்கி சென்றது.
5 நாட்களில் இரண்டு முறை துணிச்சலாக சிமெண்ட் சிலாப்புகளை வைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.