கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சி செய்த பேராசிரியர் நிர்மலாதேவியின் வழக்கு கடந்த சில வாரங்களாக தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில் தற்போது கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், கல்லூரி மாணவியை ஆபாசமாக திட்டியதாக கூறப்படும் புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கேரளாவை சேர்ந்த ஹரிதா என்னும் மாணவி முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது சக மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று விடுதிக்காப்பாளரிடம் கூறியுள்ளார்.
ஆனால் விடுதி காப்பாளர் மருத்துவமனை செல்ல அனுமதி தரவில்லை. இதுதொடர்பாக விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ் ஹரிதாவை வகுப்பறையில் சக மாணவிகள் முன்னிலையில், அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தனது அறைக்கு அழைத்து அவர் ஆபாசமாக பேசியதாகவும், தன்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றிவிட்டதாகவும் ஹரிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து ஹரிதா அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பேராசிரியர் தர்மராஜ் வேறொரு புகாரில் கைது செய்யப்பட்டவர் என்பதும் அவர் தற்போது ஜாமீனில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.