ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ள கருத்து பாஜக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுப்பிரமணிய சுவாமி என்ன கூறினாலும் அது சர்ச்சைதான். அல்லது, சர்ச்சையான கருத்துகளை மட்டுமே அவர் கூறுகிறார் எனவும் கூறலாம். பாஜகவில் இருந்து கொண்டே அக்கட்சிக்கு எதிராக கருத்து கூறுவதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இதனால் வேறு வழியின்றி ‘அது அவரின் கருத்து’ எனக் கூறி தப்பிப்பதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், அவர் திமுகவிற்கு எதிராகவும் சுவாமி கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் “ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனுக்கும், திமுகவிற்கும்தான் போட்டி என சில பாஜக நபர்கள் கிளப்பிவிட்டுள்ளனர். அப்படியெனில், மக்கள் தினகரனுக்கே வாக்களிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, போட்டி திமுகவிற்கும், தினகரனுக்கும் எனில் திமுகவை தேர்ந்தெடுப்பதற்கு பதில் தினகரனையே தேர்ந்தெடுக்கலாம் என்கிற ரீதியில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் என்னதான் பாஜக போட்டியிட்டாலும், பாஜக மேலிடத்தின் கட்டளைப்படிதான் தற்போது தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி அரசு செயல்பட்டு வருகிறது. பாஜகவின் ஆதரவு பெற்ற அதிமுகவிற்கு எதிராக செயல்படும் தினகரனுக்கு வாக்களியுங்கள் என பாஜகவை சேர்ந்த சுவாமி கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.