தமிழக அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க முடியாது என தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று 8 வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது
ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 8வது நாளாக தொடர்கிறது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் இல்லையேல் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பலமுறை எச்சரித்தும் போராட்டத்தை ஊழியர்கள் கைவிடவில்லை. தங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அரசு தரப்பில் பேசவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அரசு தரப்போ அதை ஏற்க மறுத்து வருகிறது.
இந்நிலையில் சட்டசபையில் நேற்று பேசிய தமிழக முதலமைச்சர் பழனிசாமி, சட்டப்பேரவையின் விதி எண் 110-ன் கீழ், போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கலுக்கு முன்பாக 750 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். எனவே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத்தைதை விட்டு விட்டு பணிக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார். தங்களின் சம்பள உயர்வான 2.57 சதவீதத்தை அரசு ஏற்கும் வரை போராட்டம் கைவிடப்படமாட்டாது என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. வருகிற 13ம் தேதி பொங்கல் பண்டிகை தொடங்குவதால், சென்னையில் பணிபுரியும் லட்சக்கணக்கானோர் நாளை முதல் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் அவர்கள் எப்படி செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.